-மீனவர்கள் கவலை தெரிவிப்பு-
முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களால் இயற்கை கடல்வளம் அழிக்கப்படுவதுடன் முக்கியமாக இறால் வளம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு கடலில் தற்போது இறால் சீசன் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் இந்திய இழுவைமடி படகுகள் அனைத்து வளங்களையும் அள்ளிச் செல்கின்றன. இழுவைமடி படகுகளின்; வலைகளில் கடலில் நிலத்தில் கிடக்கும் சங்கு உள்ளிட்ட மீன்குஞ்சுகள், இறால்கள் இறால் குஞ்சுகள் என அனைத்து வளங்களும் சூறையாடப்படுகின்றன.
இதனால் இப்போது முல்லைத்தீவு மீனவர்களின் வலைகளில் இறால் பிடிபடுவது மிகவும் குறைவாக காணப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் ஒருமாதகாலமாக இயற்கை சீரின்மை காரணமாக கடற்தொழிலுக்கு செல்லாத மீனவர்கள் இப்போது கடற்தொழில் நடவடிக்கையில் மெல்ல மெல்ல ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்தநிலையில் முல்லைத்தீவு கடலில் இறால் சீசன் நிலையில் முன்னைய காலங்களில் ஒரு படகிற்கு 10 கிலோவிற்கும் மேல் இறால் பிடிபடும். ஆனால் இப்போது அவ்வாறான நிலை இல்லை. ஒரு கிலோ இறால்கூட வலையில் படுவது கஷ்டமாக இருக்கின்றது.
இதற்கு முக்கிய காரணம் கடல்அடி மற்றும் இயற்கை சீற்றம் காரணமாக கடற்தொழிலுக்கு செல்லாத காலங்களில் இந்திய இழுவைப் படகுகள் எங்கள் கடலில் உள்ள வளங்களை அள்ளிச் சென்றுள்ளன. இந்த நிலையில் எங்கள் கடல் எல்லைக்குள் வரும் இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் தான் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சிறக்கும் என்று தெரிவித்துள்ளனர்.


















