இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 10,000 வீட்டுத்திட்டத்தின் நான்காவது கட்டத்தின் கீழ் 2000 பயனாளிகளுக்கு வீட்டு உரித்துக்கான ஆவணம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பதுளை – பண்டாரவளை பொது மைதானத்தில் நடைபெறவுள்ளதாக பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
மலையகப் பிரஜைகளுக்கு மிகவும் பாதுகாப்பான வீடொன்றினை உரித்தாக்கல் திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்க தகவர் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
‘மலையக மலர்ச்சி’ எனும் தொனிப்பொருளின் கீழ் மலையக மக்களின் தனி வீட்டுக்கான கனவை நினைவாக்குவதற்கான இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் நான்காம் கட்ட வீட்டுத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 4700 வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய 3000 மில்லியன் ரூபா வீட்டு நிர்மாணத்துக்காகவும், 500 மில்லியன் ரூபா அந்த வீடுகளை அண்மித்த அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நான்காம் கட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அவற்றில் 1300 வீடுகளை நிர்மாணிப்பதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு அவை நிறைவடையும் தருவாயிலுள்ளன. இவ்வாண்டிறுதியில் அதனை முழுமையாக நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 8700 வீடுகளில் 4700 வீடுகளின் நிர்மாணப்பணிகளை இவ்வாண்டில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இவற்றில் ஆரம்ப கட்டமாக 2000 வீடுகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வீட்டு உரித்துக்கான ஆவணம் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கமைய மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயமுடைய பிரதேசங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு முதற்கட்டமாக அவர்கள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளனர். 3000 – 40000 குடும்பங்கள் மண்சரிவு ஏற்படக் கூடிய அதிக அபாயமுள்ள பிரதேசங்களில் வசிப்பதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய மண்சரிவு அபாயம் மிக்க வலயங்களில் வசிக்கும் 406 குடும்பங்களுக்காக அரசாங்கத்தினால் 1300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டும் இவ்வாறு 1300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படவுள்ளது.
இந்த மக்களுக்காக அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளக் கூடிய செலவு மிக வரையறுக்கப்பட்ட தொகையொன்றாகும். எனவே தான் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அச்சுடன் இணைந்து அவர்களுக்கான 10 000 வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாண்டு ஆரம்பிக்கப்படவுள்ள 4000 வீடுகளுக்கான நிர்மாணப்பணிகளுக்கு 3500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடுஇ 2026 இல் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 4700 வீடுகளுக்கு 3500 மில்லியன் ரூபாவும் அவற்றுக்கான உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 740 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.
குறித்த வீட்டுதிட்டத்தை நடைமுறைப்படுத்தல், மேற்பார்வை செய்தல், ஆலோசனை வழங்கல் என்பன தேசிய வீடமைப்பு அதிகாரசபை மற்றும் அரச பொறியியலாளர் திணைக்களம் ஆகியவற்றினால் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக இதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் (ஜனவசம) மற்றும் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் என்பவற்றின் ஊடாக பெருந்தோட்டங்களிலுள்ள காணிகள் பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களிடமே குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. அவற்றிடமிருந்து காணிகளை விடுவித்துக் கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது – என்றார்.

















