-சர்வதேச நீதி கோரி போராட்டம்-
இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக காணப்படும் வட்டுவாகல் பாலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று ஒன்பது ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் சர்வதேச மகளிர் தினமான இன்று மகளிர் தினம் எமக்கு துக்க தினம் என தெரிவித்து தமக்கு சர்வதேச விசாரணையே தீர்வு என குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்ததுடன், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என இதுவரை இலங்கை அரசாங்கத்தால் எந்த தகவலும் வெளியிடவில்லை எனவும் இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்து, இராணுவத்தினரிடம் ஒப்படைத்த எமது பிள்ளைகள் எங்கே, வட்டுக்கோட்டை தீர்மானம் வழிகாட்டி சுய நிர்ணயம் எங்கள் உரிமை, சர்வதேசமே பதில்சொல் என பல்வேறு கோசங்களை தாங்கிய பதாதைகளுடன் போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.


















