ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2018.09.09 அன்று நாரங்கஸ்பிட்டிய, கிரிந்திவெல பகுதியில் வசித்து வந்த இந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரன்பொகுணுகம பகுதியில் வைத்து இந்த குற்றச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நிட்டம்புவ, ரன்பொகுணுகம பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான சிறிய ரக துப்பாக்கி ஒன்று, அதற்காகப் பயன்படுத்தப்படும் 5 தோட்டாக்கள், ரி-56 ரக தோட்டாக்கள் 4, 9 மில்லிமீற்றர் ரக தோட்டாக்கள் 8 மற்றும் 12 போர் ரக தோட்டாக்கள் 2 ஆகியவற்றை புலனாய்வு அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















