இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் பிரதமர் ஹரிணியிடம் உறுதியளித்துள்ளார்.
சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று செவ்வாய்க்கிழமை பீஜிங்கில் அமைந்திருக்கும் மக்கள் மண்டபத்தில் சீன ஜனாதிபதி ஜின்பிங்கை சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கையின் சீனாவுடனான ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்துதல், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் பல்வகைப்பட்ட ஒத்துழைப்பையும் மேலும் பலப்படுத்துதல் ஆகியன குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான நட்புறவைப் பற்றி நினைவு கூர்ந்த பிரதமர், ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் தலைமைத்துவத்தின் கீழ் சீனாவின் நவீனமயமாக்கல் குறித்த தொலைநோக்குப் பார்வை, சீனாவிற்கு மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் பரந்த எதிர்காலத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஏனைய நாடுகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்தார்.
இலங்கையின் முக்கியமான அபிவிருத்திப் பங்காளி நாடுகளில் ஒன்றாகச் சீனா இருப்பதால், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய திட்டங்களில் அடைந்துள்ள உறுதியான முன்னேற்றத்தை எடுத்துரைத்த பிரதமர், உயர் தரமான ‘பட்டி மற்றும் பாதை முன்முயற்சியின்’ (டீநடவ யனெ சுழயன ஐnவையைவiஎந) கீழ் சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான உதவியை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கலாநிதி அமரசூரிய எடுத்துரைத்தார்.
வர்த்தகம், சுற்றுலா, கல்வி மற்றும் மக்களுக்கிடையிலான ஒத்துழைப்பு ஆகியத் துறைகளில் இலங்கைக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்த சீன ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் வேகத்தைத் தொடர்ந்தும் பேணுவதின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
சமகால உலகளாவிய நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் உலகளாவிய நிர்வாக முன்முயற்சிக்கு இலங்கையின் ஆதரவை தொடர்ந்தும் பெற்றுத் தருவதாகப் பிரதமர் இதன்போது உறுதியளித்தார்.


















