இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை விடயத்தில் இராஜதந்திரம் என்ற பெயரில் இந்தியாவுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது கஜேந்தரகுமார் எம்.பி மேலும் தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்பில் மூன்றில் இரண்டை கொண்ட பிரதேசமாக வடக்கு, கிழக்கு உள்ளன. அந்த பிரதேசம் போர் நடைபெற்ற காலத்தில் போர் நிறுத்தம் இருந்த ஒரு சில வருடங்களை தவிர்ந்த மற்றைய வருடங்கள் முழுவதும் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட பிரதேசமாக இருந்தது. இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சூழலே. இப்போது போர் முடிவடைந்து 16 வருடங்கள் கழிந்துவிட்டன. இந்த 16 வருடங்களில் வட, கிழக்கில் கடற்றொழிலை ஊக்குவிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதுவுமே கிடையாது.
மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அங்கு அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டது என்பது உண்மையே. ஆனால் நாட்டில் உள்ள மீனவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கின்றார் என்றால் வடக்கு, கிழக்கில் உள்ள மீனவர்கள் நெடுந்தூர மீன்பிடி படகு போன்றவை தொடர்பில் கற்பனை செய்யவும் முடியாது.
இப்போது இந்தியாவின் மடிவலை தொடர்பான பிரச்சினையில் தற்போது கனிசமான அளவுக்கு முன்னேற்றம் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அப்படியில்லை/ உண்மையில் ஆயிரக்கணக்கில் வருகின்ற போது அவற்றில் கொஞ்சத்தை பிடிப்பதால் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை.
அமைச்சரான உங்களின் தலையீட்டில் உங்களின் அழுத்தத்தில் இதனை அரசாங்கம் இராஜதந்திர கோணத்தில் பார்க்கக்கூடாது. இதில் எந்த இராஜதந்திரமும் கிடையாது. உண்மையை நாங்கள் இந்தியாவுக்கு கூற வேண்டும். குறிப்பாக மீன்பிடி துறை என்பது இலங்கையில் தமிழருக்குதான் பொருத்தமானது. மூன்றில் இரண்டு கடற்பரப்பு வடக்கு, கிழக்கையே சாரும். இதன்படி தமிழர்களே மிக மோசமான அளவுக்கு பாதிக்கப்படுகின்றனர்.
இந்த விடயத்தில் இராஜதந்திரம் என கூறிக்கொண்டு மறைந்து கொண்டிருக்கக்கூடாது. இராஜதந்திரம் என்ற பெயரில் இந்தியாவுக்கும் தமிழருக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்தும் கோணத்தில் இதற்கு முன்னர் இருந்த அரசாங்கம் செயற்பட்டதை போன்றே நீங்களும் செயற்படுகின்றீர்கள். அப்படியென்றால் கூறுங்கள் நாங்கள் இந்தியாவுடன் கதைக்கின்றோம். எவ்வாறாயினும் அரசாங்கமாக இருந்துகொண்டு நீங்கள் இவ்வாறு நொண்டி சாட்டுகளை கூறக்கூடாது என்றார்.


















