-அனுமதி வழங்கியது அமைச்சரவை-
விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளில் இளைஞர் தொழில் முயற்சியாளர்களை அபிவிருத்தி செய்வதற்கான கடன் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி அரசு கொள்கைப் பிரகடனத்திற்கமைய, 5 ஆண்டுகளில் 50,000 தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான நிதி வசதிகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
அதற்கமைய, 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட யோசனை மூலம் குறித்த நோக்கத்தை அடைவதற்கான ஒருபடிமுறையாக சலுகை அடிப்படையிலான கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளில் இளைஞர் தொழில் முயற்சியாளர்களை அபிவிருத்தி செய்வதற்கான கடன் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்நிதியைப் பயன்படுத்துவதற்காக 2025.08.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இக்கடன் திட்டத்தைத் தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்கு 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் 750 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 4மூ வருடாந்த வட்டி வீதத்தின் கீழ் மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி போன்ற வங்கிகள் மூலம் இக்கடன் திட்டத்தை அமுல்படுத்தவும், அதற்குரிய வழிகாட்டலை வெளியிடுவதற்கும் அந்தந்த அமைச்சுக்கள் மூலம் திட்டமிடப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது, அதற்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.


















