-த.சுபேசன்-
கைதடி வடக்கிற்கான இ.போ.ச பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்கக் கோரி சாவகச்சேரி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென
அச்சபையின் உறுப்பினர் செ.ஜெயபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாவச்சேரி பிரதேச சபை அமர்வு அண்மையில் நடைபெற்ற போது அவர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
கடந்த காலங்களில், கைதடி வடக்குக்கான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து சேவையானது காலை, மதியம், மாலை என மூன்று பிரதான நேரங்களிலும் செயற்பட்டது. இதனால் மாணவர்கள், விவசாயிகள், அரசாங்க உத்தியோகத்தர்கள் எனப் பலரும் பயனடைந்தனர்.
பின்னர், போதுமான பேருந்துகள் இன்மையினால் சில பிரதேசங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தப்பட்டன. அந்த வகையில் கைதடி வடக்கிற்கான போக்குவரத்துச் சேவையும் நிறுத்தப்பட்டது.
சிறிது காலத்தின் பின்னர் சேவை மீண்டும் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும், இன்று வரை அந்தச் சேவை மீண்டும் வழங்கப்படவில்லை.
இதனால், பாடசாலை மாணவர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் உட்பட கைதடி வடக்கினைச் சேர்ந்தவர்களும், நவபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் சுமார் 2-3 கிலோமீட்டர் தூரம் துவிச்சக்கர வண்டிகளில் பயணித்தே கைதடி சந்திக்கு வந்து, அங்கிருந்து பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே, இப்போக்குவரத்துச் சேவையானது கைதடி வடக்கிற்கு தினமும் மீண்டும் மூன்று தடவைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கையினை முன்வைக்கின்றேன்.
இக்கோரிக்கையினை பிரதேச சபையில் தீர்மானமாக நிறைவேற்றி இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாணம் பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றார்.


















