மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக்கில் செயற்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் இணைந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அமெரிக்கப் படைகள் மற்றும் சவூதி அரேபியாவின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துமாறு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையால் வழிநடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களே இந்தத் தாக்குதலின் இலக்காக இருந்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற ஷியா ஆயுதக் குழுக்களின் ஆதிக்கம் கொண்ட ஈராக்கின் துணை இராணுவ அமைப்புகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 20 உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் தற்காலிக அமைதி நிலவிய சூழலில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்த முயன்றதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்த சில மணி நேரங்களிலேயே இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் ஏவிய அனைத்து ஏவுகணைகளும் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


















