-டக்ளஸ் தேவானந்தா பெருமிதம்-
கடந்த காலங்களில் எமது மக்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்கள் தற்போது சாதனைகளாக அறுவடை செய்யப்படுகின்றமை பெருமையளிப்பதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற தேசிய ரீதியிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் 16 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் புங்குடுதீவு மகா வித்தியாலய அணி இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளமை தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் காணப்படும் பாடசாலைகளுடன் ஒப்பிடுகின்ற போது, வளப்பற்றாக் குறைகள் காணப்படுகின்ற என்றாக புங்குடுதீவு மகா வித்தியாலயம் உள்ளது.
இவ்வாறான நிலையில்,தேசிய ரீதியிலான இந்த வெற்றிக்காக உழைத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன் எனவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.
இதேவேளை,1990 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து, யாழ்ப்பாணத்திற்கும் தீவக பகுதிகளுக்குமான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதையடுத்து அனைத்து தரப்புக்களினாலும் கைவிடப்பட்டிருந்த அங்குள்ள பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும் இதன் போது டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிடுகையில் நினைவுபடுத்தினார்.


















