-கொக்குத்தொடுவாயில் களத்தில் இறங்கிய மக்கள்-
-பா.சதீஸ்-
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும், விவசாயிகளும் இணைந்து நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
தனிநபர் ஒருவரால் கடந்த இரண்டு வாரங்களாக பிரதேச மக்களுக்கு சொந்தமான வயல் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உப்பளம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கடல் நீர் பம்பிகளின் மூலம் பாத்திகளுக்குள் செலுத்தப்படும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.
இந்த உப்பளம் அமைக்கப்பட்டால் கொக்கிளாய் கடல் நீரேரியில் உள்ள மீன்வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றியுள்ள வயல் நிலங்களும் உவர்நிலமாக மாறும் அபாயம் இருப்பதாக பிரதேச மீனவர்களும், விவசாயிகளும் கவலை வெளியிட்டனர்.
கொக்கிளாய் கடல் நீரேரியைச் சூழ வாழும் மூன்று இன மக்களும் இணைந்து இந்த உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்களும் விவசாயிகளும் பங்கேற்றிருந்ததுடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.


















