-இ.கலைஅமுதன்-
இறுதிப் போரில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும், அவை தொடர்பாக சாட்சியமளிக்க தயார் என சரத் பொன்சேகா கூறுவது சர்வதேச விசாரணைக் கோரிக்கையை மழுங்கடிப்பதற்கான ஒரு சதி முயற்சி என கூறியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
உண்மையில் இறுதிப் போரில் இடம்பெற்ற மீறல்கள் விசாரிக்கப்படவேண்டும் என்றால், அவை தொடர்பில் உண்மையாக சாட்சியம் வழங்க பொன்சேகா தயார் என்றால் அவர் பகிரங்கமாக சர்வதேச விசாரணைப் பொறிமுறையை கோரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
போர் குற்றங்கள் தொடர்பில் சாட்சியங்கள் இருந்தால் அவை விசாரிக்கப்படவேண்டும். அந்த விசாரணை உள்ளக விசாரணையாக இருக்கவேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக கருத்து தெரிவிக்கும்பொதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
வெள்ளைக்கொடி விவகாரத்தில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது அனைவருக்கும் தெரிந்த விடயம். இலங்கை அரசாங்கத்தின் இணக்கமின்றி சர்வதேச குற்றவியல் விசாரணை நடைபெற்றால் இனப்படுகொலை நடந்தமை நிச்சயம் நிரூபிக்கப்படும்.
எங்களிடம் நம்பிக்கை இருக்கிறது. அரசாங்கத்துக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது. அதனாலேயே அரசாங்கம் சர்வதேச விசாரணையை எவ்வாறு என்றாலும் தவிர்க்க வேண்டும் என நினைக்கிறது. தமிழ் மக்கள் மத்தியிலும் உள்ளக விசாரணைக்காக சிலர் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
குறிப்பாக சுமந்திரன் போன்றவர்களை குறிப்பிடலாம், இப்போது அவர்களும் பலவீனமடைந்திருக்கும் நிலையில் தமிழ் மக்கள் உள்ளக விசாரணையை நிராகரிக்கிறார்கள். சர்வதேச விசாரணையே கேட்கிறார்கள். இனப்படுகொலை என்ற விவகாரம் விசாரிக்கப்படுவதையே பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விரும்புகின்ற நிலை அவசர அவசரமாக சர்வதேச விசாரணையை நடத்துவதை முடக்க உள்ளக ரீதியாக விசாரணைகள் நடைபெறுவதாக காட்டுவதற்கான தேவை அரசாங்கத்திற்கு எழுந்திருக்கிறது.
அவ்வாறு காட்டினால் மட்டும்தான் சர்வதேச குற்றவியல் நீதி விசாரணை விவகாரம் வலியுறுத்தப்படுவதை ஏதோ ஒரு வகையில் தடுக்கலாம் அல்லது தட்டி கழித்து திசை திருப்பலாம். அதனுடாக உள்ளக விசாரணையை ஏற்படுத்துவதற்கான அவசியத்தை விளங்கிக் கொண்டு சரத் பொன்சேகா இந்த கருத்துக்களை தெரிவிக்கிறார்.
ஆக இறுதிப் போரில் இராணுவத் தளபதியாக இருந்தவரே விசாரணைக்கு இணங்குகிறார், சாட்சியம் வழங்க தயாராக இருக்கிறார் என காண்பித்து அதன் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களை கவர்ந்து அவர்களும் அதற்கு இணங்கியுள்ளார்கள், நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்ற விம்பத்தை காண்பிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா? என்ற நியாயமான சந்தேகம் எமக்கு உள்ளது.
சரத் பொன்சேகா சொல்வதன் படி இந்த வெள்ளைக் கொடி விவகாரத்தில் கோட்டாபய ராஜபக்ஷவும் அன்று பொறுப்பாக இருந்த வேறு வேறு தளபதிகளும் பொறுப்பேற்கவேண்டும் என்றால் அது நேர்மையாக இந்த விவகாரம் அணுகப்படுவதாக இருந்தால் அவரும் இணைந்து சர்வதேச விசாரணை வலியுறுத்துவதே பொருத்தமாக இருக்கும். அதை தவிர்த்து உள்ளக விசாரணைக்கு சாட்சியம் அளிக்க தயார் என்ற கோணத்தில் அவர் சொன்னாரெனில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு சதி முயற்சியே அது, அதனைப் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பக்கூடாது. என்பதையே நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் – என்றார்.


















