-ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்-
-சாத்தியப்பாடு குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் பணிப்பு-
மத்திய கிழக்கு போர் சூழலால் நாட்டில் உருவாகியுள்ள வெளிப்புற அழுத்தங்களை கருத்தில் கொண்டு ‘வீட்டிலிருந்து வேலை’ முறைமை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதுடன், அது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட நிறுவனத் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலில்,
சுகாதாரம், கல்வி, கைத்தொழில், விவசாயம் மற்றும் கடற்றொழில் போன்ற துறைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்தந்தத் துறைகளில் தற்போதைய எரிபொருள் தேவைகள் குறித்து அமைச்சுக்களின் செயலாளர்களால் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.
விடயங்களை ஆராய்ந்த ஜனாதிபதி காதாரத்துறை போன்றவற்றுக்குத் தேவையான அத்தியாவசிய எரிபொருள் கையிருப்புகளைப் பிரதேசரீதியாகப் பராமரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயுமாறு கேட்டுக்கொண்டார். அதேபோன்று, வீட்டிலிருந்து பணியாற்றும் முறைமை குறித்து மேலும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் செயலாளர்களுக்கு இதன்போது அறிவுறுத்தினார். எதிர்கால நிலைமைகள் குறித்து முன்கூட்டியே எதிர்வுகூற முடியாது என்பதால், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், அதற்காக தற்போது அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஞசு குறியீட்டு முறையை மேலும் முறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஞசு குறியீட்டு முறையில் காணப்படும் குறைபாடுகளை மிக விரைவில் திருத்தியமைத்து அதனைப் புதுப்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். மேலும், உருவாகும் புதிய நிலைமைகள் குறித்து தொடர்ச்சியான கண்காணிப்புடனும், அவதானத்துடனும் இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு துறையும் தனித்தனியாக முடிவெடுப்பதற்குப் பதிலாக, ஒட்டுமொத்தமாகச் சிந்தித்து சவால்களுக்கான மாற்று வழிகளைக் கண்டறிந்து செயற்படுத்த வேண்டும் என்றும் இதற்காகப் பரஸ்பர புரிந்துணர்வுடன் விரைவாகச் செயற்படுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.


















