-வவுனியா, மன்னாருக்கும் எச்சரிக்கை-
மனித உடலை பாதிக்கும் அளவிற்கு ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை அதிகளவில் இருக்கும் என வளி மண்டலவியல் திணைக்கள இயக்குனர் மெரில் மெண்டிஸ் கூறியுள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய மெண்டிஸ், சமீபத்திய ஆண்டுகளில் இயல்பான அளவுகளுடன் ஒப்பிடும்போது புவி வெப்பநிலை 1 முதல் 1.5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது என்றும், இது தற்போதைய வெப்ப சூழ்நிலைக்குக் காரணமாக அமைகிறது என்றும் கூறினார்.
பசிபிக் பெருங் கடலில் ஏற்படும் எல் நினோ நிகழ்வு குறித்த ஒரு முன்னறிவிப்பு, கடல் மேற்பரப்பு வெப்பநிலை மேலும் உயரும் என்று சுட்டிக்காட்டுகிறது. இது உலகளாவிய வானிலை அமைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, வரும் வாரங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட கணிசமாக அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வுத்துறை கணித்துள்ளது.
தற்போது நிலவும் வறண்ட வானிலை அடுத்த மாதம் முழுவதும் நீடிக்கும். அதிகபட்ச வெப்பநிலை முக்கியமாக மேற்கு, சபரகமுவ, வடமேற்கு, வடமத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் காலகட்டத்தில் வெப்பம் தொடர்பான உடல்நல அபாயங்களைத் தவிர்க்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

















