-சி.ஜெகதீஸ்வரன்-
சத்திர சிகிச்சை மூலம் ஒரேசூலில் மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய் ஒருவர் இரத்தப் போக்கு ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில் ஒரு மாதங்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயர்ந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வதிரி, கரவெட்டியைச் சேர்ந்த யோகராஜா மயூரதி (வயது-45) என்பவராவார்.
திருமணம் செய்து இருபது வருடங்களாக குழந்தைகள் இல்லாத நிலையில் கொழும்பில் சிகிச்சை மேற்கொண்டு கற்பம் தரித்திருந்த நிலையில் கடந்த 10 ஆம் மாதம் 3 ஆம் திகதி மகப் பேற்றிற்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 10 ஆம் மாதம் 7 ஆம் திகதி ஒரே சூலில் இரண்டு ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் சத்திர சிகிச்சை மூலம் பிரசவித்தார்.
இரத்தப் போக்கு ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் போது குடல், ஈரலில் கிருமித் தொற்று ஏற்பட்டதாக வைத்தியசாலையில் கூறப்பட்டதாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
32 நாட்கள் மயக்கமடைந்த நிலையில் சிகிச்சை பெறும் போது இரண்டு நாட்கள் மட்டும் கண் விழித்துள்ளார்.
தொடர் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆனாலும் மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமான நிலையில் உள்ளன.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை நெல்லியடி பொலிஸார் நெறிப்படுத்தினர்.


















