-வி.சரவணன்-
முள்ளியவளை கணுக்கேணிக்குளத்தின் முதலாம் வாய்க்காலை சீரமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 3,50,000 ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த வாய்க்கால் சீரமைப்பிற்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளார்.
முள்ளியவளை கணுக்கேணிக்குளத்தின் முதலாம் வாய்க்கால் சீரின்றிக் காணப்படுவதால் அந்த வாய்காலின் கீழ் 51 ஏக்கர் வரையில் நெற்செய்கை மேற்கொள்ளும் 28 விவசாயிகள் தமது வயல் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதில் பலத்த இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டிருந்தனர்.
விவசாயிகளின் முறையீட்டிற்கமைய குறித்த பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், குறித்த வாய்க்கால் சீரின்மை தொடர்பில் நிலமைகளைப் பார்வையிட்டதுடன், பாதிப்பு நிலமைகள் தொடர்பில் விவசாயிகளுடனும் கலந்துரையாடியிருந்தார்.
இதனையடுத்து பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து கணுக்கேணிக் குளத்தின் முதலாவது வாய்க்கால் சீரமைப்பிற்கு, 3,50, 000 ரூபாவை ஒதுக்கீடு செய்து தருவதாக விவசாயிகளிடம் தெரிவித்தார்.
குறித்த வாய்க்காலைச் சீரமைப்பதால் தமது 51 ஏக்கர் வரையிலான வயல்நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதிலுள்ள சிக்கல்நிலை தீருவதுடன் நீர் வீண் விரயமாவதும் தடுக்கப்படுமென விவசாயிகள் தெரிவித்தனர்.


















