-பா.சதீஸ்-
முல்லைத்தீவு – முள்ளியவளை கமநலசேவை நிலையப் பிரிவின் கணுக்கேணி மேற்கு கமக்கார அமைப்பு பிரிவிலுள்ள, ஆவரஞ்சாட்டி பகுதியில் இருட்டுமடுவின் குறுக்காக பாலம் ஒன்றை நிர்மாணிப்பதுடன் அதோடு இணைந்த வீதியையும் சீரமைத்துத் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கணுக்கேணி மேற்கு கமக்கார அமைப்பு விவசாயிகளின் அழைப்பையேற்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆவரஞ்சாட்டி பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், அப்பகுதி விவசாயிகள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்து ஆராய்ந்தார்.
இதன்போதே இருட்டுமடுப் பாலத்தை நிர்மாணிக்குமாறும், அதோடிணைந்த வீதியையும் சீரமைக்குமாறும் விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக ஆவரஞ்சாட்டி பகுதியில் அமைந்துள்ள இருட்டுமடுவோடு இணைந்த வீதியை தட்டாவயல், தேவர்கட்டு, வலையன்கமம், மலைப்புலவு, அரிவணங்கன், ஆவரஞ்சாட்டி ஆகிய பகுதிகளில் 50 ஏக்கர் வரையில் நெற்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பயன்படுத வருகின்றனர்.
இந்நிலையில் இருட்டுமடுவின் குறுக்காக பாலம் இன்மையாலும், அதனோடு இணைந்த வீதி சீரின்றிக் காணப்படுவதாலும் தாம் விவசாயத்திற்கான உள்ளீடுகளை வயல் நிலங்களுக்கு எடுத்து வருவதிலும், அறுவi செய்யப்பட்ட நெல்லை எடுத்துச் செல்வதிலும் பாரிய இடர்பாடுகளுக்கு முகம்கொடுத்து வருவதாக இதன்போது விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அத்தோடு குறித்த பாலத்தை நிர்மாணித்து, அதோடிணைந்த வீதியைச் சீரமைப்புச் செய்தால் உடுப்புக்குளம் கிராம மக்கள் எதிர்நோக்கும் நீண்டதூர போக்குவரத்து நெருக்கடிக்கும் தீர்வாக அமையுமென இதன்போது விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.
எனவே குறித்த இருட்டுமடு பாலத்தையும் அதனோடிணைந்த ஒரு கிலோமீற்றர் தூரமான வீதியையும் சீரமைப்புச் செய்துதருமாறு விவசாயிகளால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையைச் செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர், கோரிக்கையை எழுத்துமூலமாக கையளிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.


















