கல்வியென்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்று. இதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நல்ல வேலைத்திட்டங்களுக்கு நிபந்தனையின்றி நாங்கள் ஆதரவளிப்போம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டகுழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:-
யாழ்.பல்கலைக்கழகத்தில் இருக்க வேண்டிய 1090 கல்விசாரா ஊழியர்களின் எண்ணிக்கையில் 761 இடங்கள் நிரப்பப்பட்டிருந்தன. இதன்படி 327 வெற்றிடங்கள் கடந்த காலங்களில் நிலவின. அவற்றில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு அழுத்தங்களின் காரணமாக 170 வெற்றிடங்களை நிரப்பியுள்ளது. எஞ்சிய தொகையையும் நிரப்ப வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம்.
சம்பள மறுசீரமைப்பு விடயத்தில் பெரும் முறைப்பாடுகள் உள்ளன. நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்த போது சுபோதின குழுவுக்கு ஆதரவாகவே பேசியுள்ளீர்கள். ஆனால் நீங்கள் வந்த பின்னர் திருத்தங்களை மேற்கொண்டுள்ளீர்கள். இது போதுமானது அல்ல. கல்வி என்பது நாட்டில் அடிப்படையானது. முன்னுரிமை வழங்க வேண்டிய பிரிவுகளில் கல்வி, சுகாதாரம் என்பன உள்ளன.
இவற்றுக்கு முன்னுரிமை வழங்காவிட்டால் நாடு என்ற ரீதியில் முன்னேற்றத்தில் தோல்விகண்டதாகவே இருக்கும். இதனால் இந்த அரசாங்கம் இந்த சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். கல்விக்காக 6 வீதத்தை ஒதுக்குவதற்காக நாங்களும் உங்களுடன் போராடினோம். ஆனால் இப்போது 1.3 வீதத்தையே ஒதுக்கியுள்ளீர்கள். இந்த தொகை போதுமானது அல்ல. இந்த விடயத்தில் நீங்கள் நல்ல தீர்மானங்களை எடுக்கும் போது நிபந்தனைகளின்றி நாங்கள் உங்களுக்கு உதவுவோம் என்றார்.


















