-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார-
-உறவுகளில் பெரும்பாலானோர் இழப்பீடு கோரவில்லை. நீதியை கேட்கிறார்கள் இந்த விடயம் உணர்வுபூர்வமானது–
யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு. நாங்கள் இதனை மறுதலிக்கவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
இராஜகிரியவில் உள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் போனோர் பற்றிய விவகாரத்தில் சர்வதேச கட்டமைப்பு அல்லது பொறிமுறை ஊடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியாது. காணாமல் போனோர் பற்றிய அலுவகத்தின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும். காணாமல் போனோர் பற்றியவர்களின் உறவுகளில் பெரும்பாலானோர் இழப்பீடு கோரவில்லை. நீதியையும், தமது உறவுகளுக்கு நேர்ந்தது என்னவென்பதையுமே கேட்கிறார்கள். இந்த விடயம் தனித்துவமானதுடன், உணர்வுபூர்வமானது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் காணாமல் போனோர் பற்றி தொடர்ச்சியாக பேசப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் இந்த விடயத்தில் உன்னிப்பாக அவதானம் செலுத்தின.இருப்பினும் முறையான நடவடிகைகள் தேசிய மட்டத்தில் துரிதமாக முன்னெடுக்கப்படவில்லை.
காணாமல் போனோர் பற்றி விவகாரம் தனித்துவமானது. இதற்கு அரசியல் ஒத்துழைப்பு மற்றும் நிதி ஒத்துழைப்பு போதுமானதாக கிடைக்கப்பெற வேண்டும். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இவ்விரு ஒத்துழைப்புக்களும் காணாமல் போனோர் அலுவலகத்துக்கு போதுமானதாக கிடைக்கப்பெறவில்லை. காணாமல் போனோர் தொடர்பில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்தோம். காணாமல் போனோர் விவகாரம் வடக்கு, கிழக்கு, தெற்கு என சகல மாகாணங்களுக்கும் விரிவாக்கப்பட்டதொரு பிரச்சினையாகவே காணப்படுகிறது.
எவருக்கும் நாங்கள் எவ்விடத்திலும் சிறப்பு சலுகை வழங்கவில்லை. உண்மையை வெளிக்கொண்டு வரவும், நீதியை நிலைநாட்டவும் சட்டத்தின் பிரகாரம் செயற்படுகிறோம் என்றார்.


















