பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை உட்பட அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்பாட்டு குழு உறுப்பினரும், பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும், ஆலோசகருமான கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
கண்டி – ஹந்தான தோட்டத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த அவர் அங்கு கூடியிருந்த இளைஞர்களுக்கு மத்தியில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறான காணிகள் வாங்குதல் அல்லது கையகப்படுத்தல் விடயத்தை கவனிக்கும்போது தோட்டங்களில் வாழும் மக்கள் சிறுசிறு காணிகளை விவசாயம், வீடுகளை விரிவாக்க அல்லது வாழ்வாதார வசதிக்காக பயன்படுத்துவதில் இடர்படுகின்றனர்.
ஆனால் தோட்ட அபிவிருத்தி சபைத் தோட்டங்கள் மற்றும் அரசு பெருந்தோட்ட யாக்கத்திற்கு சொந்தமான தோட்டங்களில் காணிகள் வெளியாட்களுக்கு பல ஏக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது எவ்வாறு எப்படி நடைபெற்றது என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட போதும் தேயிலை காணிகள் அழிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் மக்களுடைய பொதுத் தேவைகள், மயான வசதி, பாதைகள், விளையாட்டு மைதானம் என்பவற்றுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்ற நிலைமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறு வழங்கப்பட்ட காணிகளில் எந்தவித அபிவிருத்தி செயல்பாடுகளும் செய்யப்படாமல் காணப்படுகின்றமை அவதானிக்கத் தக்கதாகும்.
இதேவேளை கடந்த அரசாங்க காலங்களில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, மக்களை பயமுறுத்தி காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலைமையையும் மக்கள் விஷனத்தோடு தெரிவிக்கின்றனர்.
இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றை சீர்திருத்தி நாட்டின் பொருளாதாரத்தை விருத்தி செய்யவும், பெருந்தோட்டத்துறை உற்பத்தியை விருத்தி செய்யவும், பெருந்தோட்டத்திலே வாழுகின்ற மக்களுடைய உரிமைகளை நிலைநாட்டவும், அதேவேளை அரசியல் ரீதியாக காணிகள் சட்டத்துக்கு முரணாக வழங்கப்பட்டிருந்தால் அவை குறித்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தான் பெரிதும் நம்புவதாக கூறினார்.

















