-சாவகச்சேரியில் நேற்று சம்பவம்-
-த.சுபேசன்-
சாவகச்சேரி – பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
சாவகச்சேரியை சேர்ந்த இளைஞரும், கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் திருமணத்திற்கான நாள் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காதலி அண்மைய நாட்களாக காதலனின் வீட்டில் தங்கியுள்ளார். இதன்போது கடந்த 5 ஆம் திகதி காதலனின் வீட்டில் காதலனின் தாயுடைய தாலிக்கொடி உட்பட்ட 8 பவுண் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக
17 ஆம் திகதி காதலனின் தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது.
மேற்படி முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கிளிநொச்சியில் இருந்து வந்து காதலன் வீட்டில் தங்கியிருந்த காதலி சாவகச்சேரியில் உள்ள காதலன் வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டுளார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தாலிக்கொடியினை சாவகச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்ததாகவும், மீதி நகைகளை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரிக்ரொக் சமூக வலைத்தளத்தில் உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன் இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், இதுவரையில் 27 இலட்சம் ரூபா செலுத்தியுள்ளதாகவும், மேலதிக பணம் செலுத்துவதற்காக காதலன் வீட்டில் திருடியதாக விசாரணையில் குறித்த யுவதி தெரிவித்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.


















