பொலன்னறுவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக 60 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 57 வீடுகள் சிறிதளவு சேதமடைந்துள்ள நிலையில் மீதமுள்ள 3 வீடுகளும் முழுவதுமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பொலன்னறுவை மாவட்டத்தில் ஒக்டோபர் 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் மாலை நேரத்தில் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்து வந்தது.
இதனால் திம்புலாகல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 9 வீடுகளும், தமன்கடுவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 8 வீடுகளும், ஹிங்குரக்கொட பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 13 வீடுகளும், லங்காபுர பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 6 வீடுகளும், வெலிகந்த பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 5 வீடுகளும், மெதிரிகிரிய பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 9 வீடுகளும், எலஹெர பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 2 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
பொலன்னறுவை மாவட்டச் செயலாளர் பிரஜன்த ஏக்கநாயக்க தலைமையில் காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசவாசிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரி உபுல் குமார தெரிவித்தார்.

















