வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடை செய்யுமாறு கோரி மக்களால் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
கங்கன்குளம் பகுதியில் இப்போராட்டத்தை ஆரம்பித்த மக்கள் அங்கிருந்து 3 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள செட்டிக்குளம் பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்று, அங்கும் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.
கிரவல் அகழ்வால் எமது கிராமமே குண்டும் குழியுமாக உள்ளது. எனவே கிராம மக்களின் விருப்பத்துக்கு மாறாக கிரவல் அகழ்வுக்கான அனுமதியை வழங்குவதை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
அத்துடன் சுற்றுச் சூழலையும் வளங்களையும் அழித்து அதற்கு எதிராக குரல் எழுப்பும் மக்களின் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்க வேண்டாம் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘இயற்கையை அழிக்காதீர்கள்’, ‘சட்டவிரோத கிரவல் அகழ்விற்கு தடை விதியுங்கள்’, ‘எமது கிராமத்தின் வளங்கள் சுரண்டலுக்கு மாத்திரமா’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு மக்கள் பல்வேறு கோசங்களை எழுப்பினர்.


















