-மாவட்ட செயலர் தலைமையில் கலந்துரையாடல்-
-பா.சதீஸ்-
‘ஸ்மார்ட்’ கிராம அலுவலர் திட்டத்தின் கீழ் கிராம சேவை உத்தியோகத்தர் அலுவலகங்களை பொதுமக்கள் நேய நிலையங்களாக மாற்றுதல் எனும் தொனிப்பொருளில் கிராம சேவை உத்தியோகத்தர்களுடனான விசேட கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கிராம சேவை உத்தியோகத்தர் அலுவலகங்களை வினைத்திறனான பொதுமக்கள் நேய நிலையங்களாக மாற்றுவதற்கு அவசியமான முறைமையை உருவாக்குதல் பௌதீக வளங்களின் தேவைப்பாடுகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் என்பன தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இச்செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக ஒவ்வொரு பிரதேச செயலக மட்டத்திலும் நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர், கிராம சேவை உத்தியோகதத்தர் உள்ளடக்கிய உப குழுவும் அமைக்கப்பட்டது.
கடந்த வெள்ள அனர்த்தத்தின்போது கிராம சேவை உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மற்றும் நிவாரண கொடுப்பனவுகள், புனர்நிர்மாணப் பணிகள், எதிர்கால அனர்த்தங்களின் போதான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் மற்றும் சமூக நலக் கொடுப்பனவு , சமுக உட்கட்டமைப்பு , பொருளாதார உட்கட்டமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலாளர்கள், பிரதம கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ,பிரதேச செயலாளர்கள், அசுவசும மாவட்ட இணைப்பாளர், மாவட்ட புள்ளி விபரவியலாளர், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் , காணி பயன்பாட்டு கொள்கை திட்டமிடல் உதவிப் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகதத்தர், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உத்தியோகத்தர் என்பவர்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.


















