கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 8 சந்தேகநபர்கள் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் நேற்று (19) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி பொலிஸ் நிலைய அதிகாரிகளால் விசேட முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 8 சந்தேகநபர்களும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 32 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், முந்தல், உக்குவலை, தும்மலசூரிய, பிலியந்தலை, யாழ்ப்பாணம், மாதம்பை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

















