-சு.பாஸ்கரன்-
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கெரோயின்,ஐஸ்,குஷ் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் தொடர்பில் 582 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 547 சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் 54 பேர் நீதிமன்ற தடுப்பு கட்டளையின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் 28 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது கடந்த ஆண்டில் ஹெரோயின் தொடர்பில் 209 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 209 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 28 பேர் தடுப்பு கட்டளையின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் 19 பேர் புனர்வாழ்வு மையங்களில் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர்.
ஐஸ் போதை தொடர்பில் 148 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 141 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு 10 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு பேர் புனர்வாழ்வு மையங்களில் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர்.
மேலும் கஞ்சா மற்றும் குஷ் போதை பொருள் தொடர்பில் 225 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 197 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு 16 பேர் தடுப்பு கட்டளையின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


















