-சு.பாஸ்கரன்-
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த போகங்களில் விவசாய அமைப்புக்களால் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட பெருந்தொகையான நிதியை முறைகேடாக கையாண்டமை தொடர்பில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றில் விவசாயிகள் சார்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை கமநலசேவை நிலையத்தின் கீழ் உள்ள புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்பு, கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள மகிழங்காடு கமக்கார அமைப்பு, இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் முறைகேடுகள் தொடர்பில் 2023 ஆம் ஆண்டு முதல் மாவட்ட செயலகம், வடக்கு மாகாண சபை ஆகியவற்றுக்கு முறைப்பாடுகள் செய்தும் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படாத நிலை காணப்பட்டது
இந்த நிலையில் குறித்த அமைப்புக்களால் விவசாயிகளிடமிருந்து காலபோகம் மற்றும் சிறு போகத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பலகோடி ரூபா நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பிலும் தனிநபர்கள் தீர்மானங்களின்றி நிதி கையாள்கை செய்தமை என்ற அடிப்படையிலும் நேற்று முன்தினம் நிதி குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் கொழும்பு பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
இதேநேரம் கடந்த வாரம் குறித்த அமைப்புகளின் நடவடிக்கை தொடர்பில் தேசிய கணக்காய்வு திணைக்கள அதிகாரிகள் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டிருந்மை குறிப்பிடத்தக்கது.


















