கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதார குறைபாடுகளுடன் இயங்கிய உணவகங்கள், வியாபார நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றினால் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் அமைந்துள்ள கண்டாவளை, பரந்தன் மற்றும் தர்மபுரம் பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் கடந்த 2 ஆம், 3 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் உணவு கையாளும் நிலையங்கள், வியாபார நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பரிசோதனையின் போது சுகாதார குறைபாடுகளுடன் காணப்பட்ட உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து பரந்தன் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் ஐந்து பலசரக்கு கடைகள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய நான்கு உணவகங்கள், இரண்டு வெதுப்பகங்களுக்கு
3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்ததுடன் 2 உணவகங்கள், ஒரு வெதுப்பகம் என்பன குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரை 14 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் கண்டாவளை பகுதியில் இரண்டு பலசரக்கு கடைகளுக்கு 35 ஆயிரம் ரூபா தண்டப் பணமும், தர்மபுரம் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் ஒரு பலசரக்கு கடைக்கு 10 ஆயிரம் ரூபா தண்டப் பணமும், 2 உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்ததுடன், குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை 14 நாட்களுக்கு தற்காலிகமாக உணவகங்களை மூடுமாறு நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


















