கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை மாலை ஐந்தாவது நாளில் நிறைவடைந்தது.
இறுதிநாள் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் திருக்கோவில் நாவிதன்வெளி காரைதீவு ஆலையடி வேம்பு தவிசாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் கிழக்கின் மூன்று மாவட்டங்களின் திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செபஸ்தியான் தேவி மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி அமல்ராஜ் அமலநாயகி அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோர் ஐ.நாவுக்கான மகஜரை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் தவிசாளர்களிடம் வழங்கினர்.
அத்துடன் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான தாமோதரம் பிரதீவன் மற்றும் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட உறவுகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

















