-சு.பாஸ்கரன்-
தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற சகல ஒடுக்குமுறைகளையும், தமிழ் கட்சிகள் ஒருமித்து ஐக்கியப்பட்டுக் கொள்வதன் மூலமே எமது இழந்த உரிமைகளை மீட்டு எடுக்க முடியுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் செயலாளர் நாயகமுமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் கனிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு, மேலும் தெரிவிக்கையில்:
முல்லைதீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் தமிழர் நிலங்களை அபகரிக்கும் நோக்கிலும், சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுக்கும் நோக்கிலும் ஜே.ஆர் ஜெயவர்த்தனா காலத்தில் கிவுல் ஓயாத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
வடக்குக்கும், கிழக்குக்குமிடையிலான நில ரீதியான தொடர்புகளை துண்டித்து சிங்கள குடியேற்றங்களின் மூலம் தமிழர்களின் இன விகிதாசாரத்தை குறைக்க வேண்டும் என்ற மிகப்பெரிய நீண்ட திட்டத்தின் அடிப்படையிலே இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
ஜே.ஆர் ஜெயவர்த்தனவால் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் பிரேமதாச, டி.பி.விஜயதுங்க, சந்திரிகா, மஹிந்த ராஜபக்ச அதற்கு பின்னர் மைத்திரிபால சிறிசேன என அதிகாரத்தில் இருந்தவர்கள் நடைமுறைப்படுத்துவதற்கு சிறிய அளவிலான முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, தற்போது இந்த இத்திட்டத்தின் மூலம் உட்கட்டமைப்பு குடிநீர் வசதி காணி என பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த பகுதியிலே நான்காயிரம் ஏக்கர் காணிகளை அபகரித்து நீர்ப்பாசன திட்டங்களை உருவாக்கி அதன் மூலம் சிங்கள குடியேற்றங்களை நிறுவும் செயற்பாட்டுக்கு இன்றைய ஆட்சியாளர்கள் உயிர் கொடுத்துள்ளனர்.
திட்டத்தை நாங்கள் அனைவரும் பொறுப்புடன் எதிர் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்பது எல்லோருடைய கடமையாகும். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞனம் சிறிதரன் நான் சிங்கள மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கியதாக ஒரு செய்தியை வெளியிட்டிருக்கின்றமை முற்று முழுதான பொய். அவரது காழ்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே இந்த கருத்தினை நான் காண்கின்றேன்.


















