நிச்சயம் எதிர்ப்பேன் என்கிறார் ரவிகரன்-
-வி.சரவணன்-
வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான ‘கிவுல் ஓயா’ திட்டம் தொடர்பான நாளை 23 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில், குறித்த கலந்துரையாடல் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்வேன் என ரவிகரன் எம்.பி கூறியுள்ளார்.
பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் 21.01.2026 நேற்று இடம்பெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் கிவுல்ஓயா நீர்ப்பாசனக் கட்டுமானத் திட்டத்திற்கு எதிராக ரவிகரன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படவிருக்கின்ற கிவுல்ஓயா நீர்த்தேக்க கட்டுமானத்திட்டத்திற்கு 2.5பில்லியன் ரூபா நிதி இவ்வருடத்திற்கான வரவுசெலவுத்திட்டத்தில் அரசாங்கத்தினால் ஒதுக்கீடுசெய்யப்பட்டதுடன் இந்த கிவுல் ஓயா திட்டத்திற்கு அமைச்சரவையும், அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் குறித்த திட்டத்தை செயற்படுத்தினால், வவுனியாவடக்கு பிரதேசத்திலுள்ள பூர்வீகத் தமிழ்மக்களின் பல சிறிய நீர்பாசனக்குளங்களும், அவற்றின் கீழான வயல்நிலங்களும், பழந்தமிழ் கிராமங்களும் பறிபோகும் அபாயம் ஏற்படுமென சுட்டிக்காட்டியதுடன், குறிப்பாக இராமன்குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளான்குளம், பெரியகட்டுக்குளம், பனிக்கல்மடுக்குளம், சன்னமுற்றமடுக்குளம், கம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம், திரிவைச்சகுளம் முதலான சிறியநீர்ப்பாசனக்குளங்களும், வெடிவைச்சகல்லு குளத்தின் கீழ்வரும் வயல்காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம் வயற்காணிகளும் வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராமங்களான காட்டுப்பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டை கிராமம், மருதோடைக் கிராமத்தின் ஒருபகுதி உள்ளிட்ட பகுதிகள் குறித்த நீர்ப்பாசன அணைக்கட்டின் நீரேந்துப்பகுதிகளாக மாறும் அபாயம் ஏற்படும் என்பதையும் சுட்டிக் காட்டி, தமிழ்மக்களுடைய பூர்வீக நிலங்களும், நீர்ப்பாசனக்குளங்களும் அபகரிக்கப்படுவதை ஏற்கப்போவதில்லை எனவும் கூறினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் கே.டீ.லால்காந்த, கிவுல் ஓயா திட்டம் தொடர்பான கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாகவும் அதில் இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடலாம் என குறிப்பிட்டார். இந்தக் கலந்துரையாடலில் கிவுல் ஓயா திட்டம் தொடர்பாக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்வேன் என ரவிகரன் கூறியுள்ளார்.















