-எஸ்.ரி.எவ். துப்பாக்கி சூடு-
கிளிநொச்சி குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உழவு இயந்திரத்தின் மீது விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு சட்ட விரோத மணல்அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்களை கைது செய்ய முற்பட்ட போது உழவு இயந்திரங்கள் தப்பியோட முற்பட்டன.
இதன்போது விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது உழவியந்திரத்தின் பின் சில்லு மற்றும் இயந்திரப் பகுதி ஆகியவற்றில் துப்பாக்கி ரவைகள் துளைத்தன.
இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரு உழவியந்திரங்கள் விசேட அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், உழவியந்திரத்தைச் செலுத்திய சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டார். சான்றுப் பொருள் மற்றும் சந்தேக நபர் ஆகியோர் மேலதிக நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.



















