-குழு அமைக்கப்படும் என்றார் பிரதி அமைச்சர்-
குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆய்வு செய்து தீர்வை வழங்குவதற்காக விரைவில் சிறப்புத் தொழில்நுட்பக் குழு நியமிக்கப்படும் என பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி உறுதியளித்துள்ளார்.
குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் அகில இலங்கை குடும்ப நல சுகாதார சேவை அதிகாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
குடும்ப நல சுகாதார சேவை பயிற்சியை 3 ஆண்டுகளாக நீட்டித்தல், குடும்ப நல சுகாதார சேவையை ஒரு சுயாதீன சேவையாக மாற்றுதல், குடும்ப நல சுகாதார சேவை பயிற்சி நிலையங்களை நிறுவுதல், மேலதிக சேவை கால கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகள் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
அகில இலங்கை குடும்ப நல சுகாதார சேவை அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், தங்கள் பணிகளை மேற்கொள்வதில் சவாலாக இருக்கும் மனித மற்றும் பௌதீக வளங்கள் தொடர்பான பல பிரச்சினைகள், அவர்களைப் பாதிக்கும் பிற தொழில்துறை பிரச்சினைகள் மற்றும் குடும்ப நல சுகாதார சேவைத் துறையில் சிறந்த தரத்தைப் பேணுவதற்கான சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பிரதி அமைச்சருடன் விரிவாகக் கலந்துரையாடியிருந்தனர்.
குடும்ப நல சுகாதார சேவை அதிகாரிகள் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்ட பிரதி சுகாதார அமைச்சர், குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சிறப்பு தொழில்நுட்பக் குழு நியமிக்கப்படும் என்றும், அந்தக் குழு குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் உண்மைகளை ஆய்வு செய்து, வழங்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் எழுந்துள்ள பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்திருந்தார்.


















