-மட்டக்களப்பு ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில்-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக முன்னர் இருந்த வேளை இராசமாணிக்கம் சாணக்கியன் கிழக்கு மாகாணத்தில் விகாரைகளை கட்டுவதற்கு அமைச்சர்களை அழைத்து அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு இன்று குருந்தூர்மலை விகாரை தொடர்பாக பேசுவது வெட்கக்கேடான விஷயம் என மட்டக்களப்பு மாவட்ட ஈ.பி.டி.பி. கட்சி ஒருங்கிணைப்பாளரும், வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வெஸ்ஒப் மீடியா கற்கை நிலையத்தில் ஈபி.டி.பி கட்சியின் வாராந்த ஊடக மாநாட்டில் நேற்று புதன்கிழமை அவர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் பேசுகையில்:
மட்டக்களப்பு எல்லை கிராமமான கிரான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வடமுனை ஊத்துச்சேனை பகுதியில் உள்ள நெலுகல் மலையில் 2021ஆம் ஆண்டு நெலுகல் ரஜமல் விகாரை என்ற பெயரில் பாரிய பௌத்த விகாரை ஒன்று புதிதாக அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இதற்கு, இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
அதேவேளை அன்று சிறிலங்கா சுதந்திர கட்சி பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராக இருந்த இரா.சாணக்கியன் மட்டக்களப்பு சின்னவத்தை பிரதேசத்தில் உள்ள விகாரையில் கட்டடம் ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரட்ண தேரருடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவை அழைத்து அடிக்கல் நாட்டி வைத்தார்.
இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் விகாரைகளை கட்டுவதற்கு அமைச்சர்களை அழைத்து அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு விட்டு இன்று வவுனியாவில் உள்ள குருந்தூர் மலை விகாரை தொடர்பாக பேசுகின்றனர். இது ஒரு வெட்கக்கேடான விஷயம் என்றார்.


















