-வி.சரவணன்- , -பா.சதீஸ்-
தமிழரின் பூர்விக நிலமான தண்ணிமுறிப்பில் (குருந்தூர்) மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் குருந்தூர் மலையை பௌத்த சமயத்துடனும், மகாவம்சத்துடனும் தொடர்புபடுத்தி திட்டமிட்ட வரலாற்றுப் புனைவுகள் செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
குருந்தூர்மலைக்கு சூழலில் ‘குருண்டி தொல்லியல் தளம்’ என்ற பெயரில் தொல்லியல் திணைக்களத்தினால் அறிவித்தல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்ட ரவிகரன் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
செவ்வாய்க்கிழமை ‘குருண்டி தொல்லியல் தளம்’ என்ற தலைப்பில் அறிவித்தல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் போலியான புனையப்பட்ட பல கதைகள் எழுதப்பட்டுள்ளதையும் காண முடிகிறது. 4 இடங்களில் அறிவித்தல் பலகைகள் வைத்துள்ளனர்.
எமது தமிழ் மக்கள் இந்தக் குருந்தூர்மலையை அண்டியுள்ள தண்ணிமுறிப்பு பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்துவந்ததுடன், இந்த குருந்தூர்மலையில் அமைந்திருந்த ஆதிசிவன் ஐயானாரை வழிபட்டு வந்துள்ளனர். இதுவே தண்ணிமுறிப்பினதும் குருந்தூர் மலையினதும் வரலாறாக இருக்கின்றது.
இந்நிலையில் இந்த தண்ணிமுறிப்புப் பகுதியில் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்த எமது தமிழ் மக்கள் இன்றளவும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. இத்தகைய சூழலில் தமிழர்களுடைய பூர்வீக வாழிடமான தண்ணிமுறிப்பையும், குருந்தூர்மலையையும் மகாவம்சத்துடனும், பௌத்த சமயத்துடனும், தொடர்புபடுத்தி தொல்லியல் திணைக்களத்தினால் போலியான வரலாறை புனைந்து காட்சிப்படுத்தியுள்ளது.
போலியான வரலாறுகளைப் புனைந்து காட்சிப்பலகைகளை காட்சிப்படுத்துவது தொல்லியல் திணைக்களத்தின் பணியில்லை. தொல்லியல் திணைக்களம் நாட்டில் சிங்களமக்கள், தமிழ்மக்களென்ற வேறுபாடின்றி வரலாறுகளை ஆராய்ந்து உண்மையான வரலாறுகளை பதிவுசெய்ய வேண்டும்.
ஆனால் இலங்கையிலுள்ள தொல்லியல் திணைக்களம் பௌத்தர்களுக்கு சார்பாக போலியான வரலாற்று புனைகதைகளை உருவாக்குவது மற்றும் காட்சிப்படுத்துவது போன்ற, செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்துவருகின்றது. குருந்தூர்மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்களாகும். தற்போதும் தொல்லியல் திணைக்களத்தால் அடாவடியாக ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களிலெல்லாம் தமிழ் மக்களே பயிர்ச்செய்கை மேற்கொண்டுவருகின்றனர்.
குருந்தூர்மலையை சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந் தமான 300 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் தொல்லியல் திணைக்களத்தினால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ளன.
இவ்வாறு தொல்லியல் திணைக்களம் பாரிய அளவில் எமது தமிழ் மக்களின் குடியிருப்பு மற்றும் பயிர்ச்செய்கைக்காணிகளையும் அபகரித்து வைத்திருப்பதற்கு எந்த அவசியமும் இல்லை. எனவே அந்தக் காணிகளும் விடுவித்து எமது தமிழ் மக்களிடம் கையளிக்கப்படவேண்டும். எமது தமிழ் மக்கள் தண்ணிமுறிப்பில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என்றே நாம் தொடர்சியாக கோரிவருகின்றோம்.
எமது பூர்வீக தாயகத்தில் நாம் எமது வரலாறு, பண்பாடு, கலாச்சாரம்,வாழ்வியல் வழிபாட்டு அம்சங்களுடன் நிறைவாக வாழ்வதையே விரும்புகின்றோம். ஆனால் எமது கட்டமைப்புக்களைச் சீர்குலைக்கின்ற வகையிலேயே கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகளை தொல்லியல் திணைக்களம் தொடர்ச்சியாகச் செயற்பட்டுவருகின்றது.
தொல்லியல் திணைக்களம் போலியாக வரலாறுகளைப் புனைந்துள்ளது. மகாவம்சக் காலத்திற்கு முன்பிருந்தே எமது தமிழர்கள் ஆண்ட இடங்களாக குருந்தூர்மலை போன்ற இடங்களுக்கு போலியான வரலாறுகளைப் புனைந்து தமிழர்களின் பூர்வீக வரலாற்றிடங்களைத் திட்டமிட்டு ஆக்கிரமிப்புச் செய்வதை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. தொல்லியல் திணைக்களத்தின் இத்தகைய செயற்பாட்டை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
மேலும் இந்த குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைகளையும் மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு பொறுப்பாகவுள்ள தேரரரும் இவ்வாறான அபகரிப்பு மற்றும் பௌத்த வரலாற்று புனைவுச் செயற்பாடுகளுக்கு முழு ஆதரவுடன் செயற்படுவதாக அறிகின்றோம்.
இவ்வாறாக பௌத்த துறவியாக இருப்பதற்கு அடிப்படைத் தகுதியே இல்லாத ஒருவரையே இங்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளது. அவருடைய அத்துமீறல்கள் மற்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகளுக்கு எனது வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும் இத்தகைய வரலாற்றுப் புனைவுகளூடாக மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழி ப்புச் செயற்பாடுகள் தொடர்பில் உரியவர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும். ஆக்கிரமிப்பை தடுக்க நாங்கள் மக்களை வழிப்படுத்துவோம் என்றார்.

















