-விரைவில் வருகிறது புதிய சட்டம்-
குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான சட்டங்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள நாலந்தா மற்றும் களுதேவல தொழிற்பேட்டைகளுக்கு மேற்கொண்ட விசேட கள விஜயத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையை விட, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அதே பொருட்களின் விலை குறைவாக இருந்தால், அது குறித்து முறைப்பாடு செய்யுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
விதிக்கப்பட்டுள்ள வரிகளை விடக் குறைவான விலையில் காலணிகள், டைல்ஸ், லைட்டர்கள் மற்றும் தீப்பெட்டிகள் உள்ளிட்ட பல தயாரிப்புகள் நாட்டிற்குள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பொருட்களாக இருக்கலாம் என்றும், இது குறித்து ஆராய்ந்து முறையாக முறைப்பாடு செய்வது உற்பத்தியாளர்களின் பொறுப்பு என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தால் மாத்திரம் இதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது என்றும் தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மேலும் சுட்டிக்காட்டினார்.

















