இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) 12வது நாளை எட்டிய நிலையில், இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில், தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுவரை உரிய தீர்வு எட்டப்படாத காரணத்தால், இன்று (05) ஞாயிற்றுக்கிழமை காலை கேப்பாபுலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பேரணியாக சென்று தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலுக்கு முன்பாக நிறைவு பெற்றிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதுடன் மக்களின் பயன்பாட்டிற்காக இருந்த பாடசாலை, ஆலயம், தேவாலயம் மற்றும் பொதுமண்டபம் ஆகியவற்றையும் இராணுவம் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை உடனடியாக விடுவித்து, இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்களது சொந்த கிராமங்களில் மீள்குடியேற வழிவகுக்குமாறு அரசாங்கத்திடமும் ஆளுநரிடமும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பல ஆண்டுகளாக பல்வேறு அரசுகளிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், தங்களது காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டனர். தங்களது காணிகளும் பொதுச் சொத்துகளும் முழுமையாக மீள வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

















