-த.சுபேசன்-
ஜெசாக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொடிகாமத்திலுள்ள நட்சத்திர மஹால் மண்டபத்தில் நாளை முற்பகல் 10 மணிக்கு மாற்றுத்திறனாளிக் குழந்தைகளினுடைய திறமைகளை வெளிப்படுத்தும் ‘உள்ளடக்கிய திறமை வெளிப்பாட்டு நிகழ்வு’ இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த விசேட தேவைப்பாடுடைய குழந்தைகள் பங்குபற்றவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொள்ளவுள்ளார்.
ஜெசாக் நிறுவனம் விசேட தேவையுடைய குழந்தைகள் மற்றும் மாணவர்களை இனங்கண்டு அவர்களை கலை மற்றும் கலாசார நிகழ்வுகளில் பங்குபற்றுவதை ஊக்குவித்து கல்விச் செயற்பாடுகளிலும் உள்வாங்கப்படுவதனை உறுதி செய்யும் வகையில் 2023 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















