இலங்கையில் 16ஆவது சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு எதிர்வரும் 12ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
16ஆவது சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு தொடர்பாக நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் ‘இலங்கைக்கு மிகவும் நம்பகமான சைபர் பாதுகாப்பு சூழலை உருவாக்குதல்’ என்பதாகும்.
இந்த தேசிய மாநாட்டை டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் மற்றும் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு (இலங்கை CERT) இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இந்த மாநாட்டில் 400க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள், தகவல் துறையில் ஈடுபட்டுள்ள வல்லுநர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசு, தனியார் துறை, வணிக நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர்.
16ஆவது முறையாக நடைபெறும் இந்த மாநாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அரசாங்கத்தின் முக்கிய திட்டம் டிஜிட்டல் மயமாக்கல் என்பதால் எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்க்கின்றோம். டிஜிட்டல் துறையை மேம்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.


















