-பா.பிரதீபன்-
யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்திருந்த காணி நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் காணி உரிமையாளர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் – இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலையம், கடந்த 30 வருடங்களாக பொலிஸாரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் இருந்து வந்தது.
அந்தக் காணிகளின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், அதற்கு பலன்கிட்டவில்லை.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டு, காணிகளுக்கு சொந்தமான 7 உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த யூன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன் போது பொதுமக்களின் காணியிலிருந்து வெளியேறி, அந்தக் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.
எனினும், 2 மாதங்களுக்கு மேலாகியும் பொலிஸார் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவில்லை. இந்நிலையில், நேற்று நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, நீதிமன்ற பதிவாளர் கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்திருந்த தனியார் காணிக்கு சென்று பொலிஸாரை வெளியேற்றி காணியை உரிமையாளர்களிடம் கையளித்தார்.
கோப்பாய் பொலிஸ் நிலையம் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையம் தனித்து இயங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

















