மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியின் உதவியுடன் மாற்றாற்றல் கொண்ட இளைஞரான வவுனியா சூடுவந்த குளம் பகுதியைச் சேர்ந்த மக்கின் முகமது அலி என்பவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணி அளவில் தனது சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தார்.
நேற்றைய தினம் திங்கட்கிழமை மன்னார் வந்த குறித்த இளைஞன், தனது பயணம் தொடர்பான விளக்கத்தை மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரனை சந்தித்து தெரியப்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணி அளவில் மன்னார் பஜார் பகுதியில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தார்.
இலங்கை நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை யொட்டியும் சில கோரிக்கைகளை முன்வைத்து மாற்றாற்றல் கொண்ட இளைஞரான மக்கின் முகமது அலி மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியூடான இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
வடமாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் தலைவரான மக்கின் முகமது அலி தொடர்ச்சியாக கடந்த காலங்களில் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், இலங்கை நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு நாடுகள் மனிதாபினான உதவிகளை மேற்கொண்டனர். அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளும் வகையிலும், புலம்பெயர் உறவுகளும் உதவிகளை மேற்கொண்டனர். அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளும் வகையிலும் குறித்த பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இலங்கை மக்கள் அனைவரும் அனர்த்தத்தின் போது, எவ்வித வேறுபாடுகளும் இன்றி ஒருவருக்கு ஒருவர் உதவிகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், இலங்கை நாட்டு மக்களிடையே உள்ள ஒற்றுமையையும், சமூக நல்லெண்ணத்தையும் நோக்காகக் கொண்டு குறித்த பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
மேலும் படித்த மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்புகள் இன்றி முடங்கியுள்ளனர். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும். என்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பயணம் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை முழுவதும் சுமார் 1500 கிலோ மீற்றருக்கும் அதிகமான கடற்கரையோரமாக குறித்த பயணம் முன்னெடுக்கப்படுகின்றது.
எனவே, மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


















