பூநகரி, சங்குப்பிட்டி பகுதியில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, தீ வைத்து எரித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும், உதவியாளரும் பூநகரி பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – பூநகரி வீதியில் 18 ஆவது மைல்கல் அருகில் கடந்த 12 ஆம் திகதி மாலை 5 மணியளவில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலைசெய்யப்பட்டவர் காரைநகரைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஆவார்.
குறித்த பெண் கடந்த 11 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணியளவில் வவுனியாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது கணவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் கொலைச் சம்பவம் தொடர்பில் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும், உதவியாளரும் கடந்த செவ்வாய்க்கிழமை கொள்ளையிட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 51 வயதுடைய மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும், 32 வயதுடைய அதே மருந்தகத்தின் உதவியாளரும் ஆவர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















