சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள் மற்றும் களிம்புகளுடன் கற்பிட்டியில் நான்கு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கடந்த 6ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி இப்பந்தீவு கடல் பகுதி மற்றும் கருவலக்குடா கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஏராளமான மருந்து மாத்திரைகள், திரவங்கள் மற்றும் களிம்புகளுடன் நான்கு சந்தேக நபர்கள் ஒரு டிங்கி படகுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடல் வழியே கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் உச்சிமுனை கடற்படை பிரிவினால் இப்பந்திவு கடல் பகுதி மற்றும் கருவலக்குடா கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கருவலக்குடா கடற்கரைக்கு வந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி (01) படகொன்று சோதனை செய்யப்பட்டது.
இதன்போது அந்த டிங்கி படகால் எடுத்துச் செல்லப்பட்டு கருவலக்குடா கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17பைகளில் பொதிசெய்யப்பட்டிருந்த 4605 மருந்து மாத்திரைகள், 15,627 மருத்துவ களிம்புகள், 494 திரவ மருந்து பாட்டில்கள் மற்றும் 4020 மருந்து பாக்கெட்டுகளுடன் நான்கு சந்தேகநபர்களையும், ஒரு டிங்கி படகையும் கடற்படையினர் கைப்பற்றப்பட்டனர்.
மேலும் இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 32 வயதுக்குட்பட்ட கல்பிட்டி, தோராயடி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் சந்தேக நபர்கள், மருந்து மாத்திரைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


















