-துரைராசா ரவிகரன் எம்.பி-
சட்டவிரோத கரைவலைத் தொழில் முறையை ஊக்கப்படுத்தியோருக்கெதிராக தற்போதைய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற அமர்வில் நேற்று முன்தினம் அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தி மேலும் தெரிவிக்கையில்:
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கு கடற்பரப்புகளில் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், வெடிவைத்து மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில், இவற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் கடற்றொழில் அமைச்சரும், பிரதி அமைச்சரும் செயற்பட்டு வருகின்றதை நான் அறிவேன். இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்ளும் எவராக இருப்பினும் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
கடந்த கால அரசாங்கங்கள்; சட்டவிரோத கரவலை தொழில் முறையை கடற்றொழிலாளர்கள் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்தி தவறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர் என்பதை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இவ்வாறான சட்டவிரோதமான கரைவலைத் தொழில்முறைக்கு கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்திய கடந்தகால அரசாங்களுக்கு, அமைச்சர்களுக்கு, இதனோடு தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு எதிராகவும் மிகக்கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென இந்த அரசைக் கேட்டுக்கொள்கின்றேன்.
இதேவேளை இந்த அரசு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.


















