வடமாகாணத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் நிலையில் அதனை எதிர்ப்பவர்களுக்கு துணைபோக வேண்டாம் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆதிவைரவர், சித்திவிநாயகர், ஸ்ரீமுருகன், அன்னை வேணாங்கன்னி, சென்யூட், முள்ளிவாய்கால் கிழக்கு ஆகிய மீனவர் சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் ஒன்றாக கூடி கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினர்.
விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், மீன்பிடியில் தடைசெய்யப்பட்ட விடயங்கள் தடைசெய்யப்பட்டதாகவே காணப்பட வேண்டும் எனவும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளுக்கு இலங்கை அரசாங்ம் அனுமதி வழங்கக்கூடாது எனவும், உழவு இயந்திரம் பாவித்து கரைவலைத் தொழிலில் ஈடுபடுவதால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்ப்படுத்த லாம் தெரிவித்தனர். தொடர்ந்து ஜனாதிபதி செயலகம் முன்பாக முல்லைத்தீவு என குறிப்பிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் குறித்த போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட கரவலை சம்மாட்டிகள் எவரும் அங்கு இல்லை எனவும் தமக்கு அரசாங்கத்திலும் கடல்தொழில் அமைச்சரிலும் நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் சுருக்குவலை, லைட் பாச்சுதல் மற்றும் டைனமேட் அடித்து மீன்பிடித்தல் மிகவும் தவறான தொழில் எனவும் சிலர் அவ்வாறு செய்வதால் தமது சிறுதொழில் வாழ்வாதாரம் பாதிப்படைவதாகவும், தாம் முல்லைத்தீவு மாவட்டத்தில் எத்தனையோ போராட்டங்கள் செய்ததாகவும் மீன்பிடி தொடர்பில் சட்டத்தில் காணப்படும் விடயங்களை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை முன்வைத்தனர்.
மேலும் சிலர் சட்டவிரோத மீன்பிடி செய்வதால் தமக்கும் ஏனைய சமூகத்திற்கும் முரண்பாடுகள் வருவதாகவும் தெரிவித்ததுடன், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளுக்கு எச்சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்கக்கூடாது எனவும் அவ்வாறு அனுமதி வழங்கினால் தமது வாழ்வாதாரம் பாதப்படைவதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன், சட்டத்தை போடும் அரசாங்கம் அதனை கருத்தில்கொண்டு கடல் தொழிலில் உழவு இயந்திர பாவனை மற்றும் சுருக்குவலை டைனமற் உட்பட சட்டவிரோத தொழில் முறைகளை முற்றாக நிறுத்தி தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


















