முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவு மீனவர்கள் நேற்று போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் சட்டவிரோத தொழில் அதிகரிப்பு சிறுதொழில் மீனவர்கள் வாழ்வு பாதிப்பு, சட்டவிரோத தொழிலை தடைசெய், சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்கு எதிராக அனுர அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பின்வாங்காதே என பல கோசங்களுடன் நடைபவனியாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு வருகைதந்து போராட்ட கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜரினை மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களிடம் கையளித்தனர்.
தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் ஊடகங்களுக்கும் அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 20 வீதமானவர்கள் மீன்பிடித்துறையில் ஈடுபட்டுள்ளனர். மீன் வளம் சட்டவிரோத முறையில் அழிக்கப்படுவதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாக இயன்றவரை சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதாகும் என தெரிவித்ததுடன், எமது மாவட்டத்தில் மீன்பிடித் துறை பிரச்சினையிலும் பார்க்க அதிகமாக இருந்த போதைப்பொருள் பிரச்சினை தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், போராட்டகாரர்களின் கோரிக்கையினை தாம் அரசாங்கத்திற்கு அனுப்புவதாகவும் அரசாங்கத்தின் கோரிக்கைகள் மீனவர்களுக்கு சாதகமாக இருக்கும் என நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.


















