தற்போது சபரிமலையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியிருக்கும் இலங்கை அரசும் சிறுவர் விவகார அமைச்சும் சகல பாடசாலை அதிபர்களும் பிரயாணத்திற்கான விசா அனுமதி வழங்கும் இந்து கலாசார திணைக்களம், இந்திய தூதரக விசா பிரிவு என்பனவும் மிக கடுமையான கண்காணிப்பையும் நடைமுறைகளையும் சிறுவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் எடுக்கவேண்டியது அவசியமாகும் என சர்வதேச இந்துமத பீடத்தின் தலைவர் சிவஸ்ரீ. பால ரவிசங்கர சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார்.
பாடசாலை கல்வியை மேற்கொள்ளும் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு விரத மாலை அணிவித்து, சபரிமலை யாத்திரைக்கு அழைத்துச் செல்லும்போது பெற்றோரும், குருசாமிகளும் கவனத்திற்கொள்ள வேண்டிய பிரதான விடயங்கள் அடங்கிய அறிக்கையினை வெளியிட்டுள்ள சிவஸ்ரீ. பால ரவிசங்கர சிவாச்சாரியார் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கையிலிருந்து சபரிமலை புனித யாத்திரை மேற்கொள்வது சாதாரணமான ஒரு பயணமாக மாற்றமடைந்து வரும் தற்கால சூழ்நிலையில், 16 வயதிற்குட்பட்ட பாடசாலை கல்வியை மேற்கொள்ளும் மாணவ சிறார்களுக்கு விரத மாலை அணிவித்து சபரிமலை யாத்திரைக்கு அழைத்துச் செல்ல முற்படும் பெற்றோர் குறிப்பாக அத்தகைய யாத்திரைக்கு பொறுப்பான குருசுவாமிகள் சில முக்கியமான விடயங்களை பரிசீலித்து அம்முடிவை மேற்கொள்வது அவசியமாகும்.
மகரஜோதி” தரிசன பருவகால யாத்திரை என்பது நவம்பர், டிசம்பர், ஜனவரியை சார்ந்ததாக, கார்த்திகை, மார்கழி, தை மாதமென 60 தினங்களை கொண்ட விரதகால யாத்திரையாகும். இக்காலப்பகுதியிலேயே இலங்கையில் அரசாங்க பாடசாலைகளிலும் வருட இறுதிப்பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை என்பவை நடப்பது வழமை. இக்காலப்பகுதியில் விரதமாலை அணியும் நிலையில் மாணவர்களின் கல்வி, பரீட்சை சூழ்நிலைக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதிக கவனத்தை செலுத்தவேண்டியது அவசியமாகும்.
அத்துடன் இன்றைய சூழ்நிலையில் ஒருவர் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள சுமார் இரண்டு லட்சம் ரூபா அளவில் முழுமையாக தேவைப்படும் நிலையில் 16 வயதிற்கு உட்பட்ட பாடசாலைக் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களின் உயர்கல்வி, தொழிற்கல்வி என ஏராளமான கல்விச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
எதிர்கால சூழ்நிலைக்கு ஏற்ப மாணவ பருவ சிறார்களின் யாத்திரை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டியது அவசியமாகும். ஏனெனில் சாதாரண குடும்ப பொருளாதார சூழ்நிலையில் இருக்கும் நடுத்தர குடும்பத்தவர்கள் திட்டமிட்டு செயற்படவேண்டியது பிள்ளைகளின் எதிர்கால கல்விக்கு உறுதுணையாக அமையும்.
பொதுவாகவே 11 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு இந்து சமய சைவ சமய ரீதியாக தீர்த்த யாத்திரை என்பது சொல்லப்பட்டது அல்ல. ஆனால் பக்தி மார்க்கத்தில் தமது நேர்த்திக்கடன் பிரார்த்தனை என்று அனுப்புவோரும் இத்தகைய விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்படியே அனுப்பினாலும் ஒருமுறை யாத்திரை அனுப்பலாம். தொடர்ந்து மூன்று வருடங்கள், ஐந்து வருடங்கள் ஏன் தொடர்ந்தே செல்ல வேண்டும் என்ற மனநிலையும் பிடிவாதமும் முறையல்ல.
இவ்விடயத்தில் தற்போது சபரிமலை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியிருக்கும் இலங்கை அரசும் சிறுவர் விவகார அமைச்சும் சகல பாடசாலை அதிபர்களுக்கும் பிரயாணத்திற்கான விசா அனுமதி வழங்கும் இந்து கலாச்சார திணைக்களம், இந்திய தூதரக விசா பிரிவு என்பன மிக கடுமையான கண்காணிப்பையும் நடைமுறைகளையும் சிறுவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டியது அவசியமாகும்.
நமது சமயத்தில் பெற்றோர் குழந்தைகளை நல்ல பிரஜைகளாக, சமய பற்றுள்ளவர்களாக, ஒழுக்க சீலர்களாக, சிறந்த கல்வியாளர்களாக உருவாக்கவே கூறுகிறது. அவர்கள் வெறுமனே சாமியார்களாகவோ, 18 வயதில் 18 வருடங்கள் சபரிமலைக்கு சென்ற துறவியாக மட்டுமே உருவாக காரணமாக அமைந்து அவர்களினதும் நமது சமூகத்தினதும் எதிர்காலத்தை பாழ்படுத்தி விடக்கூடாது என்பதே இதன் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

















