உதவித் தொகை வழங்கும் அமைப்பாக அன்றி நாட்டின் அபிவிருத்திக்கு உதவும் ஒரு அமைப்பாக சமுர்த்தி அதிகார சபையை உருவாக்க வேண்டும் என்று சமுர்த்தியுடன் தொடர்புடைய தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
கண்டியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது சமுர்த்தி தொழிற் சங்க சேவையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கீர்த்தி பண்டார கிவுல்தெனிய இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னைய ஆட்சியாளர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் சமுர்த்தி அதிகார சபையை வங்குரோத்து நிலைக்கு தள்ளினர்.
கடந்த ஆட்சி காலத்திலும் ஐ.எம்.எப் இன் நலனில் நாட்டம் காட்டிய அவர்கள் சமுர்த்தி அதிகார சபையை கலைக்கும் நிலைக்கு வழிகாட்டினர் என்றார்.
அகில இலங்கை முற்போக்கு சமுர்த்தி முகாமையாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் டப்ளியூ ஜோதிரத்ன தெரிவித்ததாவது,
1995 ஆம் ஆண்டு பொது பெரமுன டே்சியின் பொது சமுர்த்தி அதிகார சபை உருவாக்கப்பட்டது. உண்மையான சமுர்த்தி என்பது உதவித் தொகை அல்லது சகாய நிதி வழங்கும் ஒரு அறக்கட்டளை அல்ல. அது வருமையை ஒழிக்கும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றாகவே அறிமுகப்படுத்தப்பட்டது. காலத்திற்குக் காலம் அது மாற்றங்களுக்கு உற்பட்டு பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளன. இது வறுமையை ஒழிக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கு வழி நடத்தும் ஒரு அமைப்பாக அதனை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இன்று சமுர்த்தி துறையானது பல துறைகளாக பிரிந்து கொண்டு போகிறது. குறிப்பாக ‘அஸ்வெஸும’ என்ற முறையற்ற ஒரு திட்டம் காரணமாக அது பல்வேறு நிர்பந்தங்களுக்கு ஆளாகி வந்தது என்றார்.
எனவே சமுர்த்தி அமைப்பை பாதுகாத்து நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்கும் ஒரு அமைப்பாக அதனை புனரமைக்க அதிகாரிகளும் அரசும் முன்வர வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
















