நிலுவையிலுள்ள 3 இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் அச்சிட்டு வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக போக்குவரத்து, அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தையும் இந்த ஆண்டு அச்சிட்டு வழங்குவதாகவும் அந்த அதிகாரிகள் மேலும் கருத்து தெரிவித்தனர்.
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்குத் தேவையான ஒரு மில்லியன் அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சின் அதிகாரிகள் குழுவில் அறிவித்தனர்.
நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை விரைவாக வழங்குவதற்காக அவற்றை அச்சிடத் தேவையான அச்சு இயந்திரத்தை ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுவவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
வாகன இலக்கத் தகடுகளை வழங்குவது குறித்தும் கருத்து வெளியிடுகையில் வழங்குநரைத் தேர்ந்தெடுக்கும் செயன்முறை தற்போது நடைபெற்று வருவதாகவும், அமைச்சரவையின் அனுமதியை அடுத்து அச்செயன்முறையை நிறைவு செய்து இலக்கத் தகடுகளை வழங்கும் செயன்முறையை ஆரம்பிக்க முடியும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.


















