-த.சுபேசன்-
சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட உப்புக்கேணி குளத்திற்கு பாதுகாப்பு வேலி உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என சாவகச்சேரி நகரசபை உறுப்பினரும் ஓய்வுநிலை அதிபருமான கைலாயபிள்ளை வலியுறுத்தியுள்ளார்.
சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வின் போதே அவர் இதனை வலியுறுத்தியிருந்தார்.
உப்புக்கேணிக் குளம் அண்மையில் தூர்வாரப்பட்ட நிலையில் காணப்படுகிறது. குறித்த குளம் மக்கள் பாவனை அதிகம் உள்ள வீதியோரமாக காணப்படுவதனால் மாரி காலத்திற்கு முன்னர் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட வேண்டும்.
மழையில் குளம் நீரால் நிரம்பும் பட்சத்தில் உயிராபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயநிலை காணப்படுகிறது. எனவே உடனடியாக குளத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளித்த தவிசாளர் குளத்திற்கு பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.


















